காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதர், ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்களின் வசதிக்காக, மத்திய அரசு கொண்டு வந்த புராதன திட்டத்தில், அமைக்கப்பட்ட, நடைபாதை மற்றும் மழை நீர் கால்வாய் சிதைந்த நிலையில், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ், பக்தர்களுக்கு இலவசமாக கட்டப்பட்ட கழிப்பறை, அரசியல் கட்சியினர் ஆதிக்கத்தின் கீழ், நாய்கள் வளர்க்கும் கூடாரமாக மாறிவிட்டது. புராதன திட்டத்தில் மேற்கொண்ட பணிகள் வீணடிக்கப்பட்டதால், மத்திய அரசின் நோக்கம் பாழாகிவிட்டதாகவும் 'வைபை' வசதி ஏற்படுத்தாமலேயே, அதற்கான நிதி முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசு, நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித் துறை சார்பில், இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க, 12 நகரங்களை, தேர்வு செய்தது.
இந்நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 'ஹெரிடேஜ்' எனும் புராதன நகர திட்டத்தை, 2015ல் அறிவித்தது. தமிழகத்தில், காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி என இரு நகரங்கள் மட்டும் இத்திட்டத்தில் இடம் பெற்றன. இத்திட்டத்திற்கு, மத்திய அரசு, 500 கோடி ரூபாய் ஒதுக்கியது.
காஞ்சிபுரம் நகருக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதி வாயிலாக, காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் என மூன்று கோவில்களின் சுற்றுப்புறம், இக்கோவில்களுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, கழிப்பறை, உடைமைகள் பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள், தெருவிளக்கு, கோவில் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தும் கட்டமைப்புகள், நடைபாதை என, 19 வகையான செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள், பக்தர்களால் பயன்படுத்தவே முடியாத நிலையில், படுமோசமாக கிடக்கிறது.
குறிப்பாக, வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதிகளில் அமைக்கப்பட்ட, நடைபாதை மற்றும் மழை நீர் கால்வாய் சிதைந்த நிலையில், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
நாய் வளர்க்கும் கூடம்
நடைபாதை மற்றும் கால்வாய் அமைக்க மட்டும், 15.27 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
ஆனால், திட்டம் செயல்படுத்தி மூன்று ஆண்டுகள்கூட முழுமையாக பயன்படுத்த இயலாமல், வீணாகிவிட்டதாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோடிக்கணக்கில் செலவிடப்பட்ட இந்த திட்டங்களை, மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித அக்கறையும் செலுத்தாமல் இருந்த காரணத்தால், தற்போது கோவிலை சுற்றிய பகுதிகள் முகம் சுளிக்கும் விதமாக உள்ளது.
ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் பகுதியிலும், தலா 4.55 லட்சம் என, 9.10 லட்ச ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமரா மற்றும் 'வைபை' வசதிகள் செய்யப்படும் என அப்போதைய நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், இன்று வரை 'வைபை' வசதி ஏற்படுத்தவே இல்லை. அந்த நிதி முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 'வைபை' வசதி அமைத்திருந்தால், பக்தர்கள் பயனடைந்திருப்பர்.
ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகே, 11.75 லட்ச ரூபாய் மதிப்பில், இத்திட்டத்தின் கீழ், நவீன கழிப்பறை கட்டப்பட்டது. பக்தர்களுக்கு இலவசமாக கட்டப்பட்ட இந்த கழிப்பறை, அரசியல் கட்சியினர் ஆதிக்கத்தின் கீழ், நாய் வளர்க்கும் கூடாராமாக மாறிவிட்டது.
அப்பகுதியில் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் நபர், கழிப்பறையின் ஒரு பகுதியில் நாய் வளர்க்கும் இடமாக மாற்றியுள்ளார்.
நாய்கள் இருப்பதால், பக்தர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அப்பகுதியினர் கழிப்பறையை கடந்து செல்லவே பயப்படுகின்றனர்.
அதேபோல, முழுக்க முழுக்க இலவசமாக பயன்படுத்த வேண்டிய இக்கழிப்பறைக்கு, கட்டணம் வசூலிக்கின்றனர்.
மாநகராட்சி மேயர், கமிஷனர், அப்பகுதி கவுன்சிலரும் இவற்றை கண்டுகொள்வதாக இல்லை.
'இ- - டாய்லெட்'
காமாட்சியம்மன் கோவில் வடக்கு மாடவீதியில், 25.22 லட்ச ரூபாய் மதிப்பில், நான்கு 'இ- - டாய்லெட்' அமைக்கப்பட்டன. ஆனால், நான்கு ஆண்டுகளாக, அந்த 'இ- - டாய்லெட்' பயன்பாட்டுக்கே வராமல் போய்விட்டது. ஒரு ரூபாய் செலுத்தினால், இந்த 'இ- - டாய்லெட்'டை பயன்படுத்தும் வகையில், கொண்டு வரப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராமல் வீணாகி வருகிறது.
இதுபோன்று, மத்திய அரசின் நிதி பல வகையில் வீணடிக்கப்பட்டுள்ளது. நடைபாதை, மழை நீர் கால்வாய், 'இ- - டாய்லெட்' போன்ற திட்டங்கள் நாசமாகிவிட்டது அப்பட்டமாக தெரிகிறது.
எந்த நோக்கத்திற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததோ, அதன் நோக்கமே பாழாகிவிட்டதாக பக்தர்கள் புலம்புகின்றனர்.
மத்திய அரசின் நிதியில் புராதன நகர திட்டம் வீணடிக்கப்பட்டது மட்டுமல்லாமல், 'வைபை' வசதி செய்யாமல் செய்ததாக கணக்கு காண்பித்ததாக புகார் எழுந்துள்ளது.
இவை மத்திய அரசின் நிதி என்பதால், மத்திய அரசின் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் இத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.