காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் உள்ள நெல்லுக்கார தெருவில் உள்ளது சித்ரகுப்தர் கோவில். இந்த கோவிலுக்கு மிக அருகில், 'டாஸ்மாக்' கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
சித்ரகுப்தர் கோவிலுக்கு வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, அருகில் இருக்கும் 'டாஸ்மாக்' கடையால் பல்வேறு தொல்லை ஏற்படுகிறது. 'குடி'மகன்கள் கோவில் அருகிலேயே சண்டையிடுவதும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், பக்தர்களும், காஞ்சிபுரம் நகரவாசிகளும் இந்த 'டாஸ்மாக்' கடையை அகற்ற, கலெக்டரிடம் பல முறை மனு அளித்தனர்.
ஆனால், கடை அகற்றப்படாமலேயே உள்ளது. சட்டம் - ஒழுங்கு கூட்டத்திலும், 'டாஸ்மாக்' கடையை அகற்ற, டாஸ்மாக் நிர்வாக அதிகாரியிடம் கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
ஆனாலும், 'டாஸ்மாக்' அதிகாரிகள் கடையை அகற்றுவதாக இல்லை. இந்நிலையில், பா.ஜ.,வின் ஆலய மேம்பாட்டு அணியினர், வரும் 27ம் தேதி, 'டாஸ்மாக்' கடை முன், ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், காமராஜர் மக்கள் கட்சியினர், திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தில், 'டாஸ்மாக்' கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, 'டாஸ்மாக்' கடையை அகற்றாத டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, காஞ்சிபுரம் நகர் முழுதும் 'போஸ்டர்' ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
மேலும், 'சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டும், டாஸ்மாக் கடையை அகற்றாத டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டிப்பதாக' போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.