புதுடில்லி:தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 'விப்ரோ' நிறுவனம், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு மாறாக, புதிதாக வேலைக்கு சேர காத்திருப்பவர்களுக்கு, சம்பளத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளது என அண்மையில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் மீது, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம், நேற்று புகார் அளித்துள்ளது.
கண்டனம்
புதிதாக வேலைக்கு சேர தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ஆண்டு ஊதியம் 6.5 லட்சம் ரூபாய் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதை பாதியாக குறைத்து, 3.5 லட்சம் ரூபாய் மட்டுமே தரமுடியும் என்று விப்ரோ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, விப்ரோவின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று, ஐ.டி., ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது.
புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
புதிதாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களின் ஆண்டு ஊதியம் 6.5 லட்சம் ரூபாய் என்பதை, 3.5 லட்ச ரூபாயாக குறைத்துள்ளது, விப்ரோ. இது பணி நியமனத்தின் போது செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.
உரிய தீர்வு
இதுபோன்ற செயல், மற்ற நிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதுமட்டுமின்றி; வேலை பாதுகாப்பின்மைக்கும், தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் வழி வகுக்கும்.
நிறுவனத்தின் நிதி சிக்கல்களின் சுமையை, தொழிலாளர்களின் தோள்களில் சுமத்துவது நியாயமற்றது.
நிர்வாகம் தன் முடிவை மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி, உரிய தீர்வை காண வேண்டும். இதற்கு தொழிலாளர் நலத்துறை உதவும் என நம்புகிறோம்.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'விப்ரோ'வின் கடிதத்தில், துறையை சேர்ந்த பிற நிறுவனங்களைப் போலவே, உலக பொருளாதார நிலை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து ஆட்களை பணியில் சேர்ப்பது குறித்த திட்டங்களை முடிவு செய்கிறோம் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.