உடுமலை : உடுமலை அருகே, குடிமங்கலம் நால் ரோட்டில், போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வாகன நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
உடுமலை அருகே, திருப்பூர் ரோடு மற்றும் பொள்ளாச்சி -- தாராபுரம் ரோடு சந்திக்கும் மையமாக, குடிமங்கலம் நால் ரோடு அமைந்துள்ளது.
இரு வழித்தடங்களிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளதோடு, காற்றாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், நுாற்பாலைகள், கோழித்தீவன நிறுவனங்கள் என தொழில் வளர்ச்சி மிகுந்த பகுதியாகவும் உள்ளது.
உடுமலையிலிருந்து மாவட்ட தலைநகரமான திருப்பூர் மற்றும் தாராபுரம், பொள்ளாச்சி என பிரதான நகரங்களுக்கு முக்கிய வழித்தடத்தில், போக்குவரத்து அதிகம் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் சந்திப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது.
பல்வேறு மாவட்ட வாகனங்கள், கனரக வாகனங்கள் போக்குவரத்து என, வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.சுற்றுப்புற கிராம மக்கள், திருப்பூர், தாராபுரம், கரூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச்செல்ல, நால்ரோடு மையமாக அமைந்துள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், வாகன நெரிசல், தாறுமாறாக செல்லும் வாகனங்கள், திருப்பூர் - உடுமலை ரோடு, தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் அதி வேகமாக வரும் வாகனங்கள் என, விபத்து மையமாக மாறியுள்ளது. அதிலும், இரவு நேரங்களில் அதிகளவு விபத்துக்கள் நடக்கின்றன.
இதற்கு தீர்வு காண, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், ரவுண்டானா, தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக, இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.