உடுமலை : மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகளில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. 'எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க வேண்டும். துறை அலுவலர், முதன்மை கண்காணிப்பாளர் கவனமுடன் பணியாற்ற வேண்டும்,' என, முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி அறிவுறுத்தினார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 747 மாணவர், 13 ஆயிரத்து, 868 மாணவியர் என மொத்தம், 25 ஆயிரத்து, 615 பேர் தேர்வெழுத உள்ளனர்.
தேர்வுக்கு இன்னமும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கான பணிகளை மாவட்ட கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள துறை அலுவலர், முதன்மை கண்காணிப்பாளருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தேர்வுகள் துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தின் ஒன்பது தாலுகாவில் இருந்து, துறை அலுவலர், முதன்மை கண்காணிப்பாளர் உட்பட, 350 பேர் பங்கேற்றனர். சி.இ.ஓ., திருவளர்ச்செல்வி கூறியதாவது: பொதுத்தேர்வு பணிகளில் அனைத்து அலுவலர்களும் கவனமுடன் இருக்க வேண்டும். மாவட்டத்தில் எந்த தேர்வு மையத்தில் எவ்வித புகார்களுக்கு இடமளிக்காத வகையில் துறை அலுவலர், முதன்மைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும்.
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர் உட்பட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்ற முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
முதலிடம் பெறுமா?
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், திருப்பூர் மாவட்டம், முதலிடம் பெற்று ஏற்கனவே சாதித்துள்ளது. இந்த முறையும், இந்த சாதனையைப்பெறும் முயற்சியில், பள்ளிகள் ஆர்வம் காட்டுகின்றன.