ஆவடி ஆவடி அடுத்த ஆலத்துார் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு, ஆலந்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமப்புற கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டம், 2012- -13ன் கீழ் கட்டப்பட்டது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி. இதன் மொத்த கொள்ளளவு 30 ஆயிரம் லிட்டர்.
இந்த குடிநீர் தொட்டியின் துாண்களில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்து வருகிறது. அவற்றை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், முறையான பராமரிப்பின்றி பாசி படர்ந்தது போன்று தண்ணீர் கருமை நிறமாக மாறியுள்ளது.
பல மாதங்களாக பராமரிப்பில்லாமல் கிடப்பதால், தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நீர்த்தேக்க தொட்டி பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், தொட்டியின் மேல் ஏறி சுத்தம் செய்ய ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
தொட்டியை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து, குளோரின் மருந்து தெளித்த பின் தான், நீர் நிரப்பி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
ஆனால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது. உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.