செங்குன்றம் வரும் 28ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள 'தனுவாஸ்' எனும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின், உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லுாரியில், நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது.
இதில், அலமாதி, பூச்சி அத்திப்பேடு சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், பால்வள தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர்களுக்கு போட்டியாக, மழை நீரை சேகரித்து, சொட்டுநீர் பாசனத்துடன் விவசாயம் செய்வது உள்ளிட்ட, விவசாய தொழில்நுட்ப மாதிரிகளை, அரசு பள்ளி மாணவர்கள் செய்து அசத்தினர்.
மேலும், அவர்களுக்கு, அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த, சுவரொட்டி ஓவியம் வரையும் போட்டியும் நடந்தது.
உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் முனைவர் ந.குமாரவேலு தலைமையில் அலமாதி, மத்திய பால்பண்ணை உதவி ஆணையர் டாக்டர் தாமோதரன், கோவை, இறைச்சி கழிவுகளை உரமாக்கும் செயல் திட்ட நிறுவன தலைவர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அறிவியல் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டிகளில் பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டாக்டர் தாமோதரன் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது தனித்துவ பண்புகளை, கல்வி, அறிவியலோடு சேர்த்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்,'' என்றார்.
டாக்டர் குமாரவேலு பேசுகையில், ''மாணவர்கள், கல்லுாரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வசதி, செயல்முறை சாதனங்கள் மற்றும் இயந்திர வசதிகளை, திறமையாக கையாண்டு, உலக அளவிலான சாதனைகளை படைக்க உழைக்க வேண்டும்,'' என்றார்.டாக்டர் செந்தில்குமார் பேசுகையில், ''இயற்கை மாசுபாட்டில், பெரும் பங்கு வகிக்கும் உணவு கழிவுகளை, மறு சுழற்சியின் மூலம், செல்லப்பிராணிகளின் உணவாகவும், இயற்கை உரமாகவும் மாற்றி, உலக வெப்பமயமாதலை தடுக்கலாம்.
''உணவுக் கழிவுகளால் வெளிப்படும், வாயுக்களின் அளவைக் குறைத்து, இயற்கையை காக்க வேண்டும்,'' என்றார்.