கோவை : மாநகராட்சி பகுதிகளில் 'ஸ்மார்ட்' தொழில்நுட்பம் அடிப்படையில் வாகன நிறுத்த மேலாண்மை மாதிரி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியானது, 257 சதுர கி.மீ., பரப்பளவுடன், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது.
வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல், விபத்து மற்றும் ஒழுங்கற்ற வாகன நிறுத்தங்கள் அதிகரிக்கின்றன. இவற்றை தவிர்க்கும் விதமாக, போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை, மாநகர காவல்துறையுடன் இணைந்து செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
நடைபாதையை மக்கள் சீராக பயன்படுத்துதல், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்தல், வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கம். அந்த வகையில், ரேஸ்கோர்ஸ், அரசு கலைக் கல்லுாரி ரோடு உள்ளிட்ட இடங்களில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர், டூ வீலர், கார் பார்க்கிங், ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, கோவை நகரில் செய்ய வேண்டிய போக்குவரத்து மற்றும் 'பார்க்கிங்' மாற்றங்கள், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து, அதிகாரிகளுக்கு நிபுணர் குழுவினர் விளக்கம் அளித்தனர். முதற்கட்டமாக, 'ஸ்மார்ட்' தொழில்நுட்பம் அடிப்படையில், டி.பி., சாலை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாகன நிறுத்த மேலாண்மை மாதிரி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரு வகை உண்டு!
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்த தொழில்நுட்பத்தில், 'ஆன் ஸ்டிரீட்' மற்றும் 'ஆப் ஸ்டிரீட்' என இரு வகை உண்டு. 'ஆப் ஸ்டிரீட்'டில் அந்த கடைகளின் உள்ளேயே பார்க்கிங் வசதி அமைத்துள்ளதை ஒழுங்குபடுத்தப்படும்; 'ஆன் ஸ்டிரீட்' என்பது ரோட்டின் ஓரத்தில் பார்க்கிங் இடம் ஒதுக்கப்படும். இதற்கென ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூலம், செயலி வாயிலாக முன்பதிவு செய்து, பார்க்கிங் வசதியை பயன்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் பார்க்கிங் தேடி அலைய வேண்டியிருக்காது என்பதுடன், அரைகுறையாக ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.