கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் இருந்து, ஆரம்பாக்கம் நோக்கி நேற்று அதிகாலை ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. ஆந்திர மாநிலம், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம், 58, என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
அதில், பெத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், 55, சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திவாகர் வாசு, 45, ஆகியோர் பயணித்தனர். இருவரும், கூலி தொழிலாளிகள்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் மேம்பாலத்தின் மீது ஆட்டோ சென்ற போது, பின்னால் வந்த அசோக் லைலாண்ட் லாரி ஒன்று மோதியது.
இந்த விபத்தில், ஆட்டோவின் பின் பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. அதில் பயணித்த இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ரத்தினம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து ஏற்பட காரணமாக இருந்த, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர், பூமி, 40, ஆரம்பாக்கம் போலீசில் சரணடைந்தார்.
லாரி டிரைவர் துாக்க கலக்கத்தில், ஆட்டோ மீது மோதியது தெரியவந்தது. ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.