திருப்பூர் : தமிழக அரசு ஒப்புதல் பெற்ற சி.என்.ஜி., இயற்கை எரிவாயு நிரப்பும் மையம் செங்கப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயுவால் (சி.என்.ஜி.,) இயக்கப்படும் முதல் பஸ்சை, திருப்பூர் பெற்றுள்ளது. இதன் துவக்க விழா செங்கப்பள்ளி இந்தியன் ஆயில் கோகோ பம்ப் வளாகத்தில் நடந்தது. தலைமை விருந்தினராக திருமலா மில்க் புராடக்ட்ஸ் வினியோக தொடர் இயக்குனர் அருண் செல்வக்குமார் பங்கேற்றார்.
இந்தியன் ஆயில் நிறுவன தமிழக பொதுமேலாளர் ஆதவன் பேசியதாவது:
இந்தியா 2070-க்குள் புகையில்லா வாகனங்களைக் கொண்டிருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. 2030-க்குள் சுற்றுச்சூழல் பாதிப்பை 45 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சி.என்.ஜி., பயன்படுத்தப்படும் வணிக வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம்.-
பெட்ரோல், டீசல் பயன்பாடு நீண்ட காலத்துக்கு போதுமானதாக இருக்காது. போக்குவரத்தில் வாகனங்கள் மாற்று எரிபொருளுக்கு விரைவில் மாறுவது என்பது, செலவு சிக்கனத்துக்கும், சுற்றுச் சூழல் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்.
இன்னும் ஆறுமாதங்களில் சி.என்.ஜி., பம்ப்கள் எல்லா மாவட்டங்களின் நெடுஞ்சாலைகளிலும் அமையும். உக்ரைன் போரினால், புதிய மாற்று எரிபொருள் ஆராய்ச்சியும், பிரயோகமும் தாமதமாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை முதுநிலை மேலாளர், பிரியா பழனி, அதானி குழும முதுநிலை துணைத் தலைவர் ராஜேஷ் பிரபு, விஜய் காஸ் சர்வீஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சியிலிருந்து காங்கயத்துக்கு சி.என்.ஜி., பஸ் இயக்கப்படுகிறது.
'விஜய் ஆயில் அண்ட் காஸ்' நிறுவனத்துடன் இணைந்து, திருமலா மில்க் புராடக்ட் நிறுவனம், இதுவரை 18 வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு(சி.என்.ஜி.,) கருவிகளை பொருத்தியுள்ளது.