புதுடில்லி:டில்லி தமிழ் கல்விக் கழக நுாற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் துவக்க விழா, டில்லியிலுள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இவ்விழா, டில்லித் தமிழ்க் கல்விக் கழகம், முன்னாள் மாணவர்கள் டிரஸ்ட், முன்னாள் மாணவர்கள் 'பேனியன்' அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளாலும் சேர்ந்து நடத்தப்பட்டது.
ஒரு மாணவர் ஓர் ஆசிரியருடன், 1923ல் 'மதராஸி எஜுகேஷன் அசோசியேஷன்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், இன்று டில்லித் தமிழ்க் கல்விக் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்று, ஏழு பள்ளிகளையும், 7,000 மாணவர்களுடன் இயங்கி வருகிறது.
இப்பள்ளிகள் மொழிச்சிறுபான்மையினருக்குரிய பள்ளிகளாக அங்கீகாரம் பெற்று, டில்லி அரசின் மானியத்துடன், மத்திய கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்துடன் இயங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலர் ராஜு உள்ளார்.
தேசிய துணைத் தலைவர் ஷ்யாம் சாஜு, ராதா சவுகான், டில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் சூரிய நாராயணன், செயலர் ராஜு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், முதலவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக, இப்பள்ளியில் படித்த, முன்னாள் எம்.பி.,யும், நடிகருமான சரத்குமார் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''டில்லித் தமிழ்க் கல்விக் கழகம், வருங்காலத்தில் உலகத் தரத்துக்கு உயரும். பல தடைகளை கடந்து இன்று இந்த அமைப்பு நுாற்றாண்டு காண்கின்றது,'' என்றார்.
விழாவில், டில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிறுவனரான ராவ் பகதுார் பகாபால அய்யர், முதல் ஆசிரியரான பி.எம்.எஸ்., அய்யர் ஆகியோர் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பள்ளி நுாற்றாண்டு நினைவு மலர் வெளியிடப்பட்டது.
கடந்த, 2020 - -21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பில் ஏழு பள்ளிகளிலும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற சந்தியாவிற்கு, 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.