ஹைதராபாத்,தெலுங்கானாவில், தெரு நாய்கள் கடித்து ௪ வயது சிறுவன் காயமடைந்த மற்றொரு சம்பவம், ௨௪ மணி நேரத்தில் அரங்கேறி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதின் ஆம்பர்பேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கங்காதர் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய ௫ வயது மகன் பிரதீபை, நேற்று முன்தினம் தெரு நாய்கள் கடித்து குதறியதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் நடந்த ௨௪ மணி நேரத்திற்குள், இதேபோன்று மற்றொரு சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத் அருகே, சைதன்யாபுரி பகுதியில் ரிஷி என்ற ௪ வயது சிறுவன், தன் வீட்டுக்கு வெளியே நேற்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு வந்த நான்கு தெரு நாய்கள், அவனை கடித்து குதறின.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் ஓடி வந்து, நாய்களிடம் இருந்து அவனை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த சிறுவன் காயங்களுடன் தப்பினான்.