புதுடில்லி :கர்நாடகாவில் அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' அணிவதற்கு அனுமதி அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவியர், ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், தடை உத்தரவு செல்லும் என, கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவியர், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர்.
அதனால், தற்போதைய நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பல மாணவியர், தனியார் பள்ளிகளுக்கு மாறினர்.
இருப்பினும் அவர்கள் தேர்வுகளை, அரசுப் பள்ளியிலேயே எழுத வேண்டியுள்ளது.
தேர்வுகள், மார்ச் ௯ம் தேதி முதல் துவங்க உள்ளன. அதனால், தேர்வு எழுதுவதற்கு மட்டும் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரிப்பதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.