வாஷிங்டன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, ௩௭, களமிறங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு நவ., ௫ம் தேதி நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளரை, குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகள் தேர்வு செய்யும்.
அதிபர் வேட்பாளர் பதவிக்கான போட்டியில் குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே உள்ளார்.
இவரைத் தவிர தெற்கு கரோலினாவின் கவர்னராக இருந்த, ஐ.நா.,வுக்கான அமெரிக்க முன்னாள் துாதரான, இந்திய வம்சாவளி நிக்கி ஹாலேயும் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில், மற்றொரு இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் களமிறங்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்கு வேலைக்காக வந்தவர்கள்.
அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசாமி, உயிரி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் நிறுவனங்களை உருவாக்கி, அங்கு பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார்.
'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அதிபர் வேட்பாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார்.
''அமெரிக்காவில் திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பது மீண்டும் அறிமுகம் செய்யப்படும். ஆசிய நாடான சீனாவை சார்ந்திருப்பதில் இருந்து நாட்டை விடுவிப்பேன்,'' என, அவர் தன் கொள்கைகளை அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்தலில், ௨௦௧௬ல் பாபி ஜிண்டால், ௨௦௨௦ல், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏற்கனவே போட்டியிட்டுள்ளனர்.
தற்போது நிக்கி ஹாலே மற்றும் விவேக் ராமசாமி போட்டியிட உள்ளனர்.