திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று, மனைவியுடன் சமையல்காரரும் தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தில் அனைவரும் இறந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன், 37. சமையல் வேலை செய்தவர்.
இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த, திருமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நித்யா, 30, என்பவருக்கும் திருமணமாகி, 4 வயதில் ஏம்நாத் என்ற ஆண் குழந்தை உள்ளது.
வேலை சரியாக கிடைக்காததால், ஒரு மாதமாக வாசினாம்பட்டு கிராமத்தில், மாமனார் லோகநாதன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், வேலை குறித்து மாமனாருக்கும், கலையரசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், விரக்தியடைந்த கலையரசன், நேற்று முன்தினம் இரவு, தன் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து, மனைவியுடன் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மப்பேடு போலீசார் மூன்று பேரின் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.