மதுரை:நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுத்து, பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை உட்பட தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது உத்தரவு பிறப்பித்து வருகிறது.
அதன் அடிப்படையில், மதுரை வைகை ஆறு, வண்டியூர் கண்மாய் உட்பட பல்வேறு நீர்நிலைகளை அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசுத் தரப்பு மேற்கொண்டது.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.
இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன்: மதுரை வைகை ஆறு, கிருதுமால் நதி உட்பட தென்மாவட்ட நீர்நிலைகள் சர்வே செய்யப்பட்டுள்ளன. எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.
வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தரப்பு: நீர்நிலைகள் பற்றிய விபரங்கள் தமிழ் நிலம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை எத்தனை நீர்நிலைகள் சர்வே செய்யப்பட்டுள்ளன; எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன போன்ற விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் தேவை.
விவாதத்துக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுத்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, தமிழக தலைமை செயலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர விட்டனர்.