கோவை: கோவையில் போக்குவரத்துத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஆறு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கோவை சரக போக்குவரத்துத் துறையின் கீழ், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மூன்று மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில், சுழற்சி முறையில் வெவ்வேறு பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று முன் தினம் இரவில் இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.
திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, வாலாங்குளம் ரோடு மற்றும் சூலுார் ஆகிய பகுதிகளில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஏராளமான வாகனங்களை மடக்கி இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த இந்த ஆய்வில், மொத்தம் 347 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனையில், சாலைவரி செலுத்தாதது, வாகன அனுமதி புதுப்பிக்காதது, தகுதிச்சான்று இல்லாமலும், அதை புதுப்பிக்காமலும் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் அபராதமும் விதிக்கப்பட்டது. வாகனங்களுக்குச் செலுத்த வேண்டிய வரி, காப்பீடு, பர்மிட், தகுதிச்சான்றுகளைப் புதுப்பித்து ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு, கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் அறிவுறுத்தியுள்ளார். அன்றாடப்பணிகளில் பாதிப்புகள் ஏதுமின்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் வாயிலாக, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் விபத்துகள் தவிர்க்கப்படும்; அரசுக்கும் வருவாய் கிடைக்கும்,' என்றனர்.