விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி, மின் கம்பியில் உரசியதால், லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.
விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு நேற்று பகல் 2:00 மணியளவில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது.சேலம் மாவட்டம், வையகவுண்டர் புதுார் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் லாரியை ஓட்டிச் சென்றார்.
கொடுக்கூர் கிராம சாலையில் லாரி சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் வைக்கோல் உரசியது. இதனால் வைக்கோல் தீப்பற்றி எரிய துவங்கியது.
உடனே லாரி டிரைவர் அருகிலிருந்த குளத்தில் லாரியை இறக்கினார். இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் பெரும் பகுதி எரிந்து சேதமானது.
இதுபற்றி தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.