கூடலுார் : கூடலுார் அருகே விவசாய பயிர்களை சேதம் செய்து வரும் காட்டு யானையை, முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலுார் அருகே உள்ள தொரப்பள்ளி, குணில், புத்துார்வயல், தேன்வயல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள மக்னா யானை, இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மக்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, முதுமலையில் இருந்து கும்கி யானைகள் கணேசன், சீனிவாசன் அழைத்து வரப்பட்டு, அவைகளின் உதவியுடன், தொரப்பள்ளி பகுதியில் உலா வரும் காட்டு யானையை விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை விரட்டும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வனத்துறை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.