உத்தர கன்னடா-பா.ஜ., தேசிய முதன்மை செயலர் ரவி, அசைவம் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குள் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான படங்கள் பரவி வருகின்றன.
பா.ஜ., தேசிய முதன்மை செயலரான ரவி, பிப்ரவரி 19ல், உத்தரகன்னடா மாவட்டத்துக்கு வந்தார். கார்வாரில் நடந்த சிவாஜி ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பட்கலின், சிராலியில் உள்ள எம்.எல்.ஏ., சுனில் நாயக் வீட்டில் விருந்து சாப்பிட்டார்.
பின், பட்கல் நகரின் பழைய பஸ் நிலையம் அருகில் நாகபானா கோவில், ஹனுமர் கோவிலுக்கு சென்றார்.
நாகபானா கோவில் கதவு மூடப்பட்டிருந்ததால், கேட் முன் பகுதியில் நின்று ரவி, சுவாமியை நமஸ்கரித்தார். கேட் முன் பகுதியிலேயே, எம்.எல்.ஏ., சுனில் நாயக்கும், கோவில் கமிட்டி உறுப்பினர்களும், ரவியை கவுரவித்தனர்.
இதற்கு முன் அசைவம் சாப்பிட்டு, கோவிலுக்குள் நுழைந்த சித்தராமையா, பலரின் கண்டனத்துக்கு ஆளானார். இப்போது எம்.எல்.ஏ., வீட்டில் அசைவம் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குள் நுழைந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர், கட்சியினருடன் அமர்ந்து அசைவம் சாப்பிடும் படங்கள், வேகமாக பரவி வருகின்றன.
ரவி விளக்கம்
இது குறித்து, ரவி கூறியதாவது:
அன்றைய தினம், நான் அசைவம் சாப்பிட்டது உண்மைதான். ஆனால், கோவிலுக்குள் செல்லவில்லை. கதவு மூடப்பட்டிருந்தது. வெளியில் இருந்தே கை கூப்பி வணங்கினேனே தவிர, கோவிலுக்குள் நான் செல்லவில்லை.
எனக்கும் கடவுள் மீது பக்தி உள்ளது. அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்பது, எனக்கும் தெரியும். தார்மீக நடைமுறையை கடுமையாக பின்பற்றுபவன் நான். ஆண்டுதோறும் தத்த மாலை அணிகிறேன். நவராத்திரி விரதம் இருப்பேன். ஆன்மிகத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். நான் நாத்திகன் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.