வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: மண்ணின் பெருமையை ஆவணப்படுத்தி வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், ஒரு ஆசிரியர், மாணவர்கள் கூட இல்லாமல் மூடுவிழாவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.
புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், மாநிலத்தில் உள்ள கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது.
அத்துடன் எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளையும் நடத்தி, ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கி வருவதோடு, பிற மாநிலத்தவர் மற்றும் நாட்டினருக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என மூன்று துறைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 12 பேராசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிறுவனத்தில், ஒரு பேராசிரியர்கள் கூட இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு நிறுவனத்திற்கு பிஎச்.டி., படிப்பில் ஒரு மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை.
மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 இணை பேராசிரியர்கள் பணியில் இருந்தபோது தலா 6 மாணவர்கள் வீதம் 72 பேருக்கு பிஎச்.டி., படிப்பில் வழிகாட்டப்பட்டது. பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பணியாண்டுகள் இருந்தால் மட்டுமே பிஎச்.டி., வழிகாட்ட ஒப்புதல் கிடைக்கும்.
ஆனால், அனைத்து பேராசிரியர்களும் ஓய்வு பெற்றுவிட்டதால், பிஎச்.டி., மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இது பிஎச்.டி., யை.,எதிர்பார்திருந்த ஆய்வு மாணவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று, எம்.பில்., பொருத்தவரை 12 இணை பேராசிரியர்கள் இருந்தால் 24 மாணவர்கள் படிக்கலாம். ஆனால் ஒரு பேராசிரியர்கள் கூட இல்லாததால் எம்.பில்.,படிப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.
ஆசிரியர், மாணவர்கள் தான் இப்படி என்றால், நிர்வாக ஊழியர்களின் கதையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது. கல்லுாரிக்கு இயக்குனர் நியமிக்கப்படவில்லை. கலை பண்பாட்டு துறை இயக்குனர் பொறுப்பு அடிப்படையில் கவனித்து வருகிறார். பத்து பேர் இருக்க வேண்டிய அலுவலகத்தில் யூ.டி.சி., உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பிற துறைகளுக்கு மாறிவிட்டனர். இதை தவிர ஒரு நுாலகர் மட்டுமே உள்ளார். அவரும் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.

இந்த நான்கு பேருடன், ஒப்புக்கு ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது, பேராசிரியர், மாணவர் ஒருவரும் இல்லாத அவப்பெயரை நிறுவனம் சந்தித்துள்ளது. இப்படியே போனால் சில மாதங்களில் ஊழியர்களே இல்லாத ஒரு நிறுவனம் என்ற அவப்பெயரை சந்தித்து, மூடுவிழாவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சொசைட்டியாகதான் துவங்கப்பட்டது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப மத்திய தேர்வாணையம் வரை செல்ல வேண்டியதில்லை. மாநில அரசே நிரப்பிடலாம். ஆனால் 9 காலியிடங்களை நிரப்புவதற்காக கோப்பு அனுப்பப்பட்டது.
நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. குறைந்தபட்சமாக 4 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என திட்டமிடப்பட்டது. ஆனாலும் இன்னும் முடிவெடுக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கையும் நடத்தப்படவில்லை.
இவ்விஷயத்தில் கவர்னர், முதல்வர் நேரடியாக கவனம் செலுத்தி, மீண்டும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உயிரூட்டி, மண்ணின் பெருமைகளை ஆவணப்படுத்த வேண்டும்.
மண்ணுக்கு முன்னுரிமை
மாநிலத்தில் தமிழில் எம்.பில்., பிஎச்.டி., ஆய்வு படிப்பை முடித்துவிட்டு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில்உள்ளூர் பேராசிரியர்களை கொண்டே நேர்காணலை நடத்த வேண்டும். அதில் தகுதியான பேராசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் தமிழக அளவில் அந்தந்த துறைகளில் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நிரப்பலாம். மாநில அரசு இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.