கோவை: கோவை மதுக்கரையில் மையம் கொண்டுள்ள மக்னா யானையை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில், 40 வயது மதிக்கத்தக்க, தந்தம் இல்லாத ஆண் யானை (மக்னா), வனப்பகுதிக்குள் செல்லாமல் அதிகளவில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து, வனத்துறையினர், கும்கி உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்த யானை, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின், நல்லுார், கா.க.புதுார், ஆத்து பொள்ளாச்சி, பாலக்காடு சாலையை கடந்து, கோவை மதுக்கரைக்கு வந்தடைந்தது.
கோவை வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் கூறியதாவது: இந்த மக்னா யானை இதுவரை மனிதரை தாக்கியதே இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, காட்டை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை ருசி பார்த்து பழகிவிட்டது. எனவேதான், வனத்துக்குள் செல்ல விருப்பமில்லாமல், விவசாய நிலங்களை தேடியே சுற்றி வருகிறது.
உகந்த இடம் அமையாத காரணத்தால்தான் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது. மதுக்கரை வந்துள்ள யானையை, வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருவேளை மீண்டும் வனத்துக்குள் செல்லாமல் இருக்கும் பட்சத்தில், அரசு அனுமதியுடன் யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.