ஓமலுார்: வெவ்வேறு இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில் வியாபாரி, தொழிலாளி சடலங்கள் மீட்கப்பட்டன.
தாரமங்கலம், பைப்பூரை சேர்ந்தவர் அப்புசாமி, 28. 'டைல்ஸ்' கற்கள் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி ஷர்மிளாதேவி, 25, மகன் மணிகண்டன், 5, மகள் கிருஷிகா, 3, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளனர். அப்புசாமி, இரு ஆண்டாக ரெட்டிப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து வந்தார். மது அருந்தும் பழக்கமுடைய அப்புசாமி கடந்த, 20 இரவு, வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் ரெட்டிப்பட்டியை சேர்ந்த போத்தன் கிணற்றில் அப்புசாமி உடல் மிதந்தது. ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் மேச்சேரி, காளிகவுண்டனுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 57. மளிகை கடை வைத்திருந்தார். அவருக்கு மனைவி கண்ணம்மாள், திருமணமான இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து புறப்பட்ட ராஜேந்திரன் பின் திரும்பவில்லை. நேற்று காலை தேடியபோது, அவர் சென்ற பைக், மேச்சேரி - தொப்பூர் சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் தேடியபோது ராஜேந்திரன் உடல் மீட்கப்பட்டது. கண்ணமாள் புகார்படி, மேச்சேரி போலீசார், ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரிக்கின்றனர்.