ஈரோடு: ஈரோடு, மரப்பாலம் பகுதியில் கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட, அ.தி.மு.க., அரசு, 10 லட்சம் கோடி ரூபாயாக தமிழகத்தின் கடனை உயர்த்தி சென்றது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்த வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று, கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பூசிக்கான பணிகள், மக்களுக்கு, 4,000 ரூபாய் நிவாரண உதவி என வழங்கினார்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டத்தை,
5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி விடுவார். அதைவிட தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் அவர் செயல்படுத்தியதை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவிக்க தவறிவிட்டார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும் அவசர கோலத்தில் பல குற்றச்சாட்டு, அறிவிப்பு என எதையாவது செய்து வருகிறார்.
எனவே, பழனிசாமி, அண்ணாமலை போன்றோர் கூறுவதை பற்றி மக்கள் சிந்திக்காமல், விரைவில் தாக்கல் செய்ய உள்ள, தி.மு.க.,வின், 2வது பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள், தேர்தல் நேர வாக்குறுதி தொடர்பான அறிவிப்புகள் வர உள்ளது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் இக்கூட்டணியை ஆதரியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.