விளைந்த மரத்திற்கு, இயற்கையில் உள்ள வலுவைவிட, அதிக வலுவைத் தருவதோடு, கார்பன்டையாக்சைடு மாசினை உறிஞ்சவும் வைக்க முடியுமா? அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய பதப்படுத்தும் முறைப்படி அது சாத்தியமாகியிருக்கிறது.
மரத்தில் செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் மற்றும் லிக்னின் ஆகிய பொருட்கள் கலந்துள்ளன. மரத்திற்கு அதன் பழுப்பு நிறத்தைத் தருவது லிக்னின்தான். அதை நீக்கினால் மரம், நிறமற்றதாகிவிடுகிறது. பிறகு, ஏராளமான நுண் துளைகளைக் கொண்ட உலோக-கரிம துகள்களை, லிக்னின் நீக்கப்பட்ட மரத்தினுள் செலுத்துகின்றனர். அதிலிருக்கும் செல்லுலோசுடன் உலோக கரிமத் துகள்கள் ஒட்டிக்கொள்கின்றன. இந்த துகள்கள்தான் ஏராளமான கார்பன்டையாக்சைடினை உறிஞ்சிக்கொள்கிறது. இப்படி உருவான மரத்தின் வலு, வழக்கமான மரத்தைவிட அதிகமாகவே இருப்பதாக சோதனைகள் தெரிவித்துள்ளன.
லிக்னின் நீக்கி, உலோக-கரிமம் சேர்த்த மரங்களால் சூழலுக்கு அதிக பாதிப்பு இருக்காது என ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.