புதுடில்லி:'சமூக நல பங்குச் சந்தை'யை துவங்குவதற்கு, 'தேசிய பங்குச் சந்தை' கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், தற்போது அதற்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சமூக நல பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் தனி ஒரு பிரிவாக விரைவில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலீடுகள்
சமூக நல பங்குச் சந்தை என்பது, வழக்கமான பங்குச் சந்தை போன்றே செயல்படக்கூடிய ஒன்று.
சமூக நல பணிகளில் ஈடுபட விரும்பும் தொண்டு நிறுவனங்கள் அல்லது லாப நோக்குடன் கூடிய தொண்டு அமைப்புகள் போன்றவை, இந்த தளத்தில் தங்களுடைய நிறுவனத்தை பட்டியல்இடலாம்.
இந்த அமைப்புகளுக்கு நிதி வழங்க விரும்புபவர்கள், இதன் பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாக, சமூக நல அமைப்புகள் எளிதாக முதலீடுகளை திரட்டலாம்.
மேலும், நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இதன் பங்குகளை வாங்குவதால், சிறிது லாபமும் ஈட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
மேலும் தொண்டு நிறுவனங்கள் பத்திரங்களை வெளியிட்டும் நிதி திரட்டிக் கொள்ளலாம்.
கண்காணிப்பு
கடந்த 2019- - 20 பட்ஜெட் அறிவிப்பின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சமூகநல முதலீடுகளை அதிகரிக்க, ஒரு வர்த்தகச் சந்தையை இந்தியா உருவாக்கும்,” என்று தெரிவித்திருந்தார்.
இப்போது அது செயல்பாட்டுக்கு வர உள்ளது.
தங்களிடம் உபரியாக இருக்கும் தொகையை, நற்பணிகளுக்காக நன்கொடை வழங்குவது பலரின் பழக்கம்.
ஆனால், அந்த நன்கொடைகள் சரியான வகையில், சரியான நபர்களுக்கு அல்லது காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது கடினம்.
இந்நிலையில், உண்மை யான உதவும் உள்ளம் கொண்ட அமைப்புகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும் நல்லதொரு பாலமாக, இந்த சமூக நல பங்குச் சந்தை இருக்கும்.
இதனால், இதுநாள் வரை நிதி ஆதாரம் இல்லாமல் தடுமாறி வரும் அமைப்புகள் இனி, இந்த சந்தையின் வாயிலாக எளிதாக நிதிதிரட்டிக் கொள்ள முன்வரலாம்.
திரட்டப்படும் நிதியை கொண்டு, தொழில்நேர்த்தி மிக்க தொண்டு பணிகளை, அமைப்புகள் மேற்கொள்ள முடியும்.
மேலும், இந்த தளம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் கண்காணிப்பில் இயங்குவதால், தொண்டு அமைப்புகளின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இருக்கும்.
வெளிநாடுகளில் இத்தகைய சந்தை, சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்பதால், அரசும் இதில் ஆர்வமாக உள்ளது.
விழிப்புணர்வு
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், இத்தகைய சமூக நல பங்குச் சந்தைகள் நன்றாக செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வரவிருக்கும் இந்த சந்தை, சமூக நலப் பணிகளை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது, 'ஜீரோ கூப்பன்; ஜீரோ பிரின்சிபல்' திட்டத்தின்படி குறைந்தபட்ச வெளியீட்டின் அளவை 1 கோடி ரூபாயாகவும், சந்தா பெறுவதற்கான குறைந்தபட்ச விண்ணப்ப அளவை 2 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய சமூக நல பங்குச் சந்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என, தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அஷிஷ்குமார் சவுகான் தெரிவித்துஉள்ளார்.