மதுரை:தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் திட்டத்தில் ஆறு ஆண்டுகளாக 5,318 கோடி ரூபாய் பயன்படுத்தாமல் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டிலாவது முழுமையாக நிதியை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதிதிராவிடர் மக்களை சமூக பொருளாதாரம், கல்வியில் உயர்த்தும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் 2016 -22 வரை 6 நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி 75 ஆயிரத்து, 930 கோடி ரூபாய்.
இதில் 70 ஆயிரத்து, 969 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள 5,318 கோடி ரூபாய் பயன்படுத்தாமல் அரசுக்கே திரும்ப சென்றுள்ளது.
கடந்த 2021--22 நிதியாண்டில் மட்டும் 2,418 கோடி ரூபாய் பயன்படுத்தவில்லை.
இது குறித்து ஆய்வு செய்துள்ள மதுரை சமூக ஆர்வலர் செ. கார்த்திக் கூறியதாவது:
கடந்த, 2022 - -23 நிதியாண்டில் மாநில நலத்திட்ட செலவினம் 74 ஆயிரத்து 892 கோடி ரூபாய். இதில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கியது 16 ஆயிரத்து, 442 கோடி ரூபாய்.
கடந்த ஒன்பது மாதங்களில் 5,976 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 மாதங்களில் 10 ஆயிரத்து 446 கோடி ரூபாய் திட்டங்களுக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் தலைமையில் மாவட்டந்தோறும் கண்காணித்து 100 சதவீதம் நிதியை பயன்படுத்தவேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்த தனிச் சட்டம் இயற்றவேண்டும்.
இவ்வாறு கூறினார்.