சென்னை, தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகமான இ.எஸ்.ஐ.சி., மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமான இ.பி.எப்., ஆகியவற்றின் சந்தாதாரர்களின் குறைதீர் கூட்டம், வரும் 27ம் தேதி நடக்கிறது.
சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ஆண்ட்ரூ பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:
'நிதி ஆப்கே நிகட் - 2.0' எனும் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' என்ற குறை தீர்க்கும் முகாம் மற்றும் 'இ.எஸ்.ஐ.சி., - சுவிதா சமகம்' கூட்டம் ஆகியவை, வரும் 27ம் தேதி நடக்க உள்ளது.
இ.பி.எப்.ஓ., - இ.எஸ்.ஐ.சி., இணைந்து இந்த கூட்டத்தை, காலை 9:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை, அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நடத்த உள்ளன.
சென்னை மாவட்டத்துக்கான முகாம், 'தமிழக சுகாதார சீரமைப்பு திட்டம், 356, டி.எம்.எஸ்., இணைப்பு கட்டடம், ஆடிட்டோரியம், தரைத்தளம் அண்ணா சாலை, தேனாம்பேட்டை' என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நடக்க உள்ளது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்துக்கான குறைதீர் கூட்டம், 'திருவள்ளூர் நகராட்சி ஜே.என்.சாலை, அம்பத்துார்' என்ற முகவரியில் நடக்க உள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கான குறைதீர் முகாம், 'பல்லாவரம் தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கம், 89, அண்ணா சாலை, நாகல்கேணி, குரோம்பேட்டை -- 44' என்ற முகவரியில் நடக்க உள்ளது.
இந்த முகாமில், இ.எஸ்.ஐ., சட்ட விதிகளின்படி, புதிய நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள், இணையவழி சேவைகள் விளக்கப்படும்.
மேலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடுவது, உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை களைவது, வாழ்வுச் சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட சேவைகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.