பொன்னேரி :சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில், பொன்னேரிக்கு, நேற்று மாலை 4:00 மணிக்கு வந்தது.
பயணியர் ஏறி, இறங்கிதும் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், பெரியகாவணம் கேட் அருகே நின்றது.
அந்த ரயிலில் பயணித்த இரு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே, 'ரூட் தல' யாரு என்பதில் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
பீதியடைந்த பயணியர், ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரயிலில் இறங்கி தப்பினர். சிறிது நேரத்திற்கு பின், ரயில் இயக்கப்பட்டது.
இந்த மோதலில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சென்னை மாநில கல்லுாரி மாணவர் ராஜ்குமார், 20, காயம் அடைந்தார்.
அவர், பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.