ஆலந்துார், பரங்கிமலை, -பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்கான தேர்தல் ஏப்., மாதம் நடக்கவுள்ள நிலையில், கட்சியினர் சுறு சுறுப்பாகி வாக்காளர் சரிபார்ப்பு பணியை துவங்கியுள்ளனர்.
பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழு வார்டுகள் உள்ளன. அதில், பரங்கிமலை பகுதியில் நான்கு வார்டுகளும், பல்லாவரம் பகுதியில் மூன்று வார்டுகளும் உள்ளன.
அங்கு நடக்கும் தேர்தலில் போர்டு தலைவராக ராணுவ அதிகாரி பொறுப்பு வகிப்பார். துணை தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை தேர்தல் நடத்தி, பொதுமக்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுப்பர்.
இந்த போர்டுக்கான தேர்தல், 2015, ஜனவரியில் நடந்தது. இதில், ஆறு வார்டுகளில் அ.தி.மு.க.,வும், ஒரு வார்டில் தி.மு.க.,வும் வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம், 2020, பிப்., மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதனிடையே, ஏழு வார்டுகளில் நான்காவது வார்டு எஸ்.சி., பெண் வார்டாகவும், ஆறாவது வார்டு பெண் பொது வார்டாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால், கடந்த மூன்று ஆண்டுகளாக கன்டோன்மென்ட் தேர்தல் நடத்தவில்லை.
இந்நிலையில், ஏப்., மாதம், 30ம் தேதிக்குள் கன்டோன்மென்ட் தேர்தலை நடத்தி முடிக்க, பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியினர் சுறுசுறுப்பாகி வார்டு வாரியாக வாக்காளர் சரிபார்ப்பு பணியை துவங்கியுள்ளனர்.