சென்னை: சென்னைக்கு அதிக மின்சாரம் எடுத்து வர, தரைக்கு அடியில் 400 கிலோ வோல்ட் திறனில் கேபிள் மின் வழித்தடம் அமைக்கும் பணி, மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கி உள்ளது.
தமிழக மின் வாரியம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல திறனுடைய கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்கிறது. கோபுரம் அமைக்க அதிக நிலம் தேவை.
சென்னையில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இட நெருக்கடியால், அதிக மின்சாரம் எடுத்து வர மின் கோபுர வழித்தடம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக, சென்னையில் முதல் முறையாக தரைக்கு அடியில் 400 கிலோ வோல்ட் திறனில் கேபிள் வழித்தடம் அமைத்து, அதிக மின்சாரம் எடுத்து வரும் பணி, 2020 மே மாதம் துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒட்டியம்பாக்கம் 400 கி.வோ., துணை மின் நிலையத்தில் இருந்து கிண்டி 400 கி.வோ., துணை மின் நிலையம் இடையில் 21 கி.மீ., கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த பணி, 2022 நவம்பரில் முடிவடைந்தது.
திருவள்ளூர் மாவட்டம், அலமாதி - காஞ்சிபுரத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் 400 கி.வோ., வழித்தடத்தில் வெள்ளவேடு என்ற இடத்தில் இருந்து கிண்டிக்கு 16 கி.மீ., கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
தவிர, திருவள்ளூர் மணலி - கொரட்டூர் 400 கி.வோ., வழித்தடத்தில் மஞ்சம்பாக்கம் என்ற இடத்தில் இருந்து கொரட்டூர் இடையில் 12 கி.மீ., கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது. திட்ட செலவு 1,000 கோடி ரூபாய்.
மேற்கண்ட வழித்தட பணிகளை ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், வெள்ளவேடு - கிண்டி வழித்தடத்தில் 2 கி.மீ., துாரமும்; மஞ்சம்பாக்கம் - கொரட்டூர் வழித்தடத்தில் 4 கி.மீ., துார பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
அந்தாண்டு இறுதியில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு, சென்னையில் சாலை தோண்டும் பணிக்கு மாநகராட்சி தடை விதித்தது. இதனால் வெள்ளவேடு - கிண்டி; மஞ்சம்பாக்கம் - கொரட்டூர் வழித்தட பணிகள் முடங்கின.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின் தற்போது, அந்த வழித்தடங்களிலும் தரைக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கால் கேபிள் வழித்தட பணிக்கு, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, இரு வழித்தடங்களும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே, அதற்குள் பணிகளை முடிக்குமாறு, ஒப்பந்த நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.