கோவை;மகா சிவராத்திரியன்று வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்களிடம் இருந்து, ஒன்றரை டன் அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில், ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாதங்கள் மட்டுமே வனத்துறையால் அனுமதிக்கப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 17 முதல் 20 ஆம் தேதி வரை, பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதியளித்திருந்தது.
அந்த நான்கு நாட்களில் மட்டும், கோவையிலிருந்து மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்தனர். மலையேறும் பக்தர்கள் தாகம் தீர்ப்பதற்காக, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்வது வழக்கம். வழக்கமாக குடித்து முடித்த பாட்டில்களை வனத்துக்குள்ளேயே வீசிவிட்டு வந்து விடுவர்.
20 ரூபாய் திட்டம்!
மலையேற்றம் முடிந்ததும் வனத்துறையினர் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பாட்டில்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் போது, வனப்பகுதிக்குள் இருந்து நான்கு முதல் ஐந்து டன் அளவிற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் அகற்றப்பட்டு வந்தன. பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வனத்திற்குள் வீசுவதைத் தவிர்ப்பதற்காக, இந்த முறை வனத்துறையினர், ஒரு புதுமையான முயற்சியை கையாண்டனர்.
அதாவது, பக்தர்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக 20 ரூபாய் பெறப்பட்டு விடும். மலைக்குச் சென்று விட்டு திரும்பும் பக்தர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களைக் கொடுத்துவிட்டு அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
தவிர, யாரேனும் ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை தவறுதலாக வனத்தில் வீசியிருந்தாலும், அதைக் கொண்டு வருவோருக்கும் 20 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, பக்தர்கள், பாட்டில்களை வனப்பகுதியில் வீசாததோடு, மற்றவர்கள் வீசிய பாட்டில்களையும் கொண்டு வந்து அடிவாரத்தில் ஒப்படைத்தனர். இதற்கென, வனத்துறையினர், தன்னார்வ அமைப்பினர் என 200க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மலையிலும் கண்காணிப்பு!
வனத்துறையின் இந்த பெருமுயற்சியின் விளைவாக, ஒன்றரை டன் பிளாஸ்டிக் பாட்டில்கள், பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து, ஏழு மலைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேகரித்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர், அவற்றை மறுசுழற்சிக்காக அனுப்பியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மலைக்குச் செல்லும் பக்தர்களின் பைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது, ஆறாவது மலைகளிலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த 20 ரூபாய் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அடுத்த ஆண்டிலும் இந்த முயற்சி தொடரும்.' என்றனர்.
இதேபோன்ற திட்டத்தை, நகரப்பகுதிகளிலும் செயல்படுத்தினால் பிளாஸ்டிக் பாட்டில் குப்பையை குறைக்கலாம்!