கோவை:கோவையின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மேம்பாலப் பணிகளை வேகப்படுத்துவதற்கு, கலெக்டர் கிராந்திகுமார் அடுத்தடுத்து அதிரடி ஆய்வு மேற்கொள்வதால், பல்வேறு துறை அதிகாரிகளும் சுறுசுறுப்புடன் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
கோவையில், அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை, மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜி.என்.மில்ஸ் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கட்டுமானப் பணியை வேகப்படுத்த வேண்டுமென்பது, கோவை மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தடைகள் உள்ளன. மீட்டிங் நடத்துவதோடு, பல அதிகாரிகள் நின்று கொள்வதால், பணிகள் வேகமெடுக்காமல் இருந்தன. இந்நிலையில், கலெக்டர் கிராந்திகுமார், பாலங்கள் கட்டப்படும் ஒவ்வொரு இடத்துக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து வருகிறார்.
அதிரடியாக கள ஆய்வு செய்வதோடு, தீர்க்கப்படாமல் உள்ள துறை ரீதியான பிரச்னைகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுகிறார். ஏற்கனவே அவிநாசி ரோடு மேம்பாலப் பணியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய கலெக்டர், நேற்று முன்தினம் இரவு உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான பாலம் பணிகளை பார்வையிட்டு, அங்கு நடக்க வேண்டிய பணிகள் குறித்து, விளக்கம் கேட்டார்.
அதற்கு, 'ஆத்துப்பாலத்தில் இறங்கு தளம் கட்டுவதற்கு வக்பு வாரிய இடங்களை வழங்க தடையின்மை சான்று வழங்க வேண்டும்.
இதற்குரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டு விட்டது; இன்னும் சான்று வழங்காமல் தாமதித்து வருகிறது' என்று கலெக்டரிடம், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சுந்தரமூர்த்தி தெரிவித்தார். உடனே, வக்பு வாரிய உயரதிகாரிகளிடம் பேசுவதாக, கலெக்டர் உறுதியளித்தார்.
இதேபோல், ஜி.என்.மில்ஸ் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார், திட்ட செயலாக்கம் தொடர்பாக விளக்கினர்.
ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி முன்பிருந்து எல்.எம்.டபிள்யு., சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு, வண்ணான்கோவில் சந்திப்பில் முடியும் வகையில், ரூ.115.24 கோடியில், 1,850 மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படுகிறது; மூன்று சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்; மேட்டுப்பாளையத்துக்கு விரைந்து செல்லலாம். 84 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலங்களை கொண்டு வர, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.
கலெக்டரின் களப்பணி, அனைத்துத் துறை அதிகாரிகளையும் உற்சாகப்படுத்தி வருவதோடு, அவர்களை ஓய்வின்றி பணி செய்யவும் துாண்டியுள்ளது. இதனால், பாலங்கள் கட்டும் பணிகள் அனைத்தும் வேகமெடுக்குமென்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.