சேலையூர்: தாம்பரம், சேலையூரை அடுத்த அகரம்தென், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 24; சாமியானா பந்தல் அமைப்பாளர்.
பதுவஞ்சேரியை அடுத்த கஸ்பாபுரத்தில், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக, வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல் அமைக்கும் பணியில், நேற்று முன்தினம் ஈடுபட்டார். அவருடன், அகரம்தென் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார், 25, என்பவரும் இருந்தார்.
பந்தலின் கம்பியை உயர்த்தியபோது, மேலே சென்ற மின் வடத்தில் உரசி, கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். சீனிவாசன் மாடியில் இருந்து கீழே விழுந்தார். அரவிந்த்குமார் மாடியிலேயே விழுந்தார்.
படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
படுகாயமடைந்த சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். அரவிந்த்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.