அவிநாசி:அவிநாசி, சூளையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடியில், 448 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 10 மாதங்கள் முன், குடியிருக்க கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. 'நம் குடியிருப்பு; நம் பொறுப்பு' திட்டத்தை செயல்படுத்த, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'அவிநாசி சோலை நகர் குடியிருப்போர் நல சங்கம்' தொடங்கப்பட்டது.
இச்சங்கம் மூலம், மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டிற்கும் சந்தாவாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் இருந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
குடியிருப்பில் இரண்டாவது பிளாக்கில் கூலி தொழிலாளியான பால்ராஜ் 40, மனைவி ரேணுகா தேவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாததால், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியேறாமல், வாடகை வீட்டில் வசித்து வந்து, கடந்த இரண்டு மாதங்கள் முன் தான் இங்கு இடம் மாற்றி வந்துள்ளார்.
குடியிருப்போர் நல சங்கத்தினர் பால்ராஜிடம், ''கடந்த 8 மாத சந்தா தொகையாக 1600 ரூபாய் செலுத்த வேண்டும்; ஒட்டுமொத்தமாக செலுத்த வேண்டும்'' என கேட்டுள்ளனர்.
இதற்கு பால்ராஜூம், அவரது மனைவியும், தற்போது தான் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வந்துள்ளதாகவும் குடியிருப்பிற்கு வந்தே இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குரிய சந்தா தொகை 400 ரூபாய் செலுத்துவதாக கூறியுள்ளார்.
''குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், எங்களை திட்டினர். சங்க உறுப்பினர் பதிவையும் நீக்கி, வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவோம் என்று மிரட்டினர். வீட்டிற்கு செல்லும் தண்ணீர் குழாய் இணைப்பை தன்னிசையாக முடிவெடுத்து துண்டிக்கப்பட்டது.
குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பில் வசிக்க உரிய பாதுகாப்பு வேண்டும்'' என்று அவிநாசி போலீசில் பால்ராஜ் புகார் அளித்துள்ளனர்.
குடியிருப்போர் நல சங்க பொருளாளர் சையத் முகமதுவிடம் கேட்டபோது, ''குடிசை மாற்று வாரிய சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்குட்பட்டுதான், மாத சந்தா ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் வசூலிக்கப்படுகிறது.
பால்ராஜ் குடும்பத்தினரிடமும் அதேபோன்றுதான் கேட்கப்பட்டது. 'குடியிருந்த நாட்களுக்கு மட்டும்தான் பணம் செலுத்த முடியும்' என்று கறாராக பால்ராஜ் கூறினார். குடிநீர் இணைப்பு துண்டிப்பு, அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரிலேயே துண்டிக்கப்பட்டது.
சந்தாவை, குடியிருப்பு பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.