அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாவது:
ஏற்கனவே உயர் நீதிமன்ற அமர்வு, 'பொதுக்குழு கூட்டப்பட்டதும், அதில் நிறைவேற்றிய தீர்மானமும் செல்லும்' என்ற தீர்ப்பை வழங்கியது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ௧.௫ கோடி அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, இந்த தீர்ப்பு மிகப்பெரிய மகிழ்ச்சி தரும். பன்னீர் செல்வத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இனி, அ.தி.மு.க., எழுச்சியோடு கட்சிப் பணியாற்றும். கட்சியின் பொதுச் செயலராவது குறித்து, மூத்த நிர்வாகிகளுடன் பேசி, பின்னர் முடிவு செய்யப்படும். தனிக்கட்சி துவங்கிய தினகரனுக்கு, எங்கள் கட்சி பற்றி பேச தகுதியில்லை. அவரது செல்வாக்கு, கடந்த தேர்தல்களில் நிரூபணமாகியுள்ளது.
'கட்சிக்காக உழைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம்; ஒரு சிலரை தவிர' என, ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். அந்த ஒரு சிலர் இறங்கி வந்தாலும், ஏற்பது இல்லை என்றாகி விட்டது. அவர்கள் தான் உச்ச நீதிமன்றம் வரை எங்களை கொண்டு சென்றனர். அதனால் தான், பத்திரிகை, ஊடகங்களில் எங்களை திருப்பி திருப்பி வறுத்து எடுத்தீர்கள்.
ஏற்கனவே நாங்கள், நான்கு ஆண்டு ஆட்சி நடத்தினோம். ஆட்சி ஆறு மாதம் இருக்குமா என்று கேட்டனர். அதே போல, இக்கட்சி இரண்டாக, நான்காக ஆகிவிட்டது என, தினமும் விவாதம் நடத்தினர். இப்போது ஒன்றாக வந்துள்ளது. எதிர்காலத்தில் அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்.
பொதுக்குழு செல்லும் என்பதால், ரவீந்திரநாத் எம்.பி., உட்பட பலர் நீக்கப்பட்டதும் செல்லும். அவை நடைமுறைப்படுத்தப்படும். பன்னீர் செல்வம் உடன் சென்ற எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,யின் நிலை குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தினகரன், பன்னீர்செல்வத்துடன் இருந்தவர்கள், தீர்ப்புக்கு பின் இனி எங்களுடன் வருவர்.
இவ்வாறு அவர் கூறினார்.