மேட்டுப்பாளையம்:நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி மற்றும் சபரி பாலாஜி நகரில், கழிவுநீர் தேங்கி உள்ளது. இதிலிருந்து உற்பத்தி ஆகும் கொசு தொல்லையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி, 29 வது வார்டில், 2008 ஆம் ஆண்டு பாலாஜி ராமலிங்க நகர், சபரி பாலாஜி நகர் ஆகிய குடியிருப்புகள் லே அவுட் போடப்பட்டது. தற்போது இரு நகரிலும், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 14 ஆண்டுகள் ஆகியும் இந்த இரு நகர்களுக்கும் சாக்கடையோ, ரோடோ அமைக்கவில்லை.
மேலும் மண்டேலா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர், இரு குடியிருப்பு நகரில் உள்ள ரோட்டில் தேங்கி நிற்கிறது. இந்த கழிவு நீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து இரு குடியிருப்பு பகுதி மக்கள் கூறியதாவது: ராமலிங்க பாலாஜி நகர், சபரி பாலாஜி நகருக்கு தார்ரோடும், சாக்கடையும் அமைக்க கோரி, பல ஆண்டுகளாக நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை. சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர், எங்கள் குடியிருப்பு ரோடுகளில் தேங்கி நிற்கிறது.
கழிவு நீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால், பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு, அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம், உடனடியாக கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.