மேட்டுப்பாளையம்:காரமடையில் அரங்கநாதர் கோவில் மாசி மகத்தேர் திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள் அமைக்க, ஏலம் விட்டதில், 51.63 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
காரமடை நகராட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, இம்மாதம், 27ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த மாதம் ஆறாம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவை முன்னிட்டு, நகராட்சி பகுதியில் தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள், துாரிகள் அமைக்க ஏலம் விடுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இறுதியில் தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள் அமைக்க, 51.63 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. நகராட்சிக்கு இந்த வருவாய் கிடைத்ததை அடுத்து, பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய, உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.