திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் கீழடி, முதுவன்திடல், பழையனூர், அச்சங்குளம், திருப்பாச்சேத்தி, பிரமனூர் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் 750 முதல் ஆயிரம் நெல் ( 40கிலோ) மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மையத்திலும் 10க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் நெல் மூடைகளை இறக்க, சுத்தம் செய்ய, மீண்டும் லாரிகளை ஏற்ற பயன்படுத்தப்படுகின்றனர். இதில் சரிபாதி வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அந்தந்த நெல் கொள்முதல் மையங்களிலேயே தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் எடை போடப்பட்ட நெல் மூடைகளில் சவடு மண் கலந்து மோசடி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் திருப்புவனத்தில் நெல் மூடைகளில் கலப்படம் நடப்பது கண்டறியப்பட்டு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இந்த மோசடி மீண்டும் நடப்பதாக விவசாயிகள் தரப்பில் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே நெல் கொள்முதல் மையங்களில் மோசடிகளை கண்டறிய சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறியதாவது:
மையங்களில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மையங்களில் கொள்முதல்செய்யப்பட்ட நெல் மூடைகளை உடனுக்குடன் கோடவுனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.