சென்னை:பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ்; பொறியியல் பட்டதாரி. தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுடன் நட்பாக பழகினார். இருவரும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில் பேசி கொண்டிருந்தனர். இரவு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை.
நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கிடந்தது. இந்த சம்பவம், 2015 ஜூனில் நடந்தது. கோகுல்ராஜை கடத்தி கொலை செய்ததாக, தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டது.
வழக்கு விசாரணை, மதுரையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. யுவராஜ் உள்ளிட்ட, 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், சங்கர் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்தும், மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து, 10 பேரும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து, கோகுல்ராஜ் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தன. முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியம் அளித்ததால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரித்தனர். அனைத்து தரப்பிலும், வழக்கறிஞர்களின் வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், அப்பீல் மனுக்களின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.