கோவை:ஐகோர்ட் உத்தரவை மீறி, கோவை மாநகராட்சியில் கூடுதல் சொத்து வரி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில், 5.43 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். தமிழக அரசு உத்தரவுப்படி, கடந்த, 2022, ஏப்., முதல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 28 வரி விதிப்புதாரர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பை மீறி, சொத்து வரி உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு சார்பில், மாநகராட்சி கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியிருப்பதாவது:
ஐகோர்ட் உத்தரவில், 'சொத்து வரி உயர்வு செல்லுபடியாகும். 'ரிட்' மனுதாரர்களுக்கு, 2023-24 நிதியாண்டு முதல் வரி உயர்வு பொருந்தும். மற்றவர்களுக்கு, 2022, அக்., 1 முதல் சொத்து வரி உயர்வு பொருந்தும். அதாவது, 2022-23ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருந்தும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 'முதல் அரையாண்டு சொத்து வரி ஏப்., 15க்குள், இரண்டாவது அரையாண்டு சொத்து வரி அக்., 15க்குள் செலுத்த வேண்டும்.
மே மாதமே மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி திருத்தம் தொடர்பாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குள் முதல் அரையாண்டுக்கான கடைசி தேதி முடிந்து விட்டது. அதனால், சொத்து வரி உயர்வை பின்னோக்கி பார்க்க முடியாது. முதல் அரையாண்டுக்கு சொத்து வரியை திருத்துவது தவறானது; சட்ட விரோதமானது. பிழையானது அல்ல; அபத்தமானது' என, ஐகோர்ட் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கோவை மாநகராட்சியில், 2022, ஏப்., 1 முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இது, ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிரானது. 2022-23ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கு (ஏப்., முதல் செப்., வரை) பழைய வரி, இரண்டாம் அரையாண்டுக்கு (2022 அக்., முதல், 2023 மார்ச் வரை) திருத்தப்பட்ட வரி வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்த தொகையை, 2023-24ம் நிதியாண்டுக்கான முதல் அரையாண்டு தொகையில் சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கதிர்மதியோன் கூறுகையில், ''சொத்து வரி உயர்வு தீர்மானம், மே மாதம் நிறைவேற்றப்பட்டது. ஐகோர்ட்டில் டிசம்பரில் தீர்ப்பு கூறப்பட்டது. மே மாத தீர்மானத்தை, அதன்பின், அரசிதழில் வெளியிட்டு விட்டு, முன் தேதியிட்டு, ஏப்., முதல் சொத்து வரியை அமல்படுத்துவது ஏற்புடையதல்ல. இதை ஐகோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது. 2022 இரண்டாவது அரையாண்டில் இருந்தே சொத்து வரி உயர்வு அமலுக்கு வர வேண்டும்.
''இல்லையெனில், சட்ட ரீதியாக மீண்டும் கோர்ட்டுக்குச் செல்ல இருக்கிறோம்,'' என்றார்.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டதற்கு, ''அரசாணைப்படி சொத்து வரி உயர்வு அமல்படுத்தியுள்ளோம். கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் அனுப்பிய கடிதத்தை பார்க்கவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்,'' என்றார்.