ஈரோடு:ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலால் ஓட்டுப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்., 27ல் நடக்கிறது. 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக ஈரோடு மாநகரில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று வெயில் 34 டிகிரி செல்ஷியசாக பதிவாகியிருந்தது.
இதேநிலை வரும் நாட்களில் குறிப்பாக பிப்.,27ல் தொடர்ந்தால் பகல் பொழுதில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பிப்.,27ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மக்கள் ஈரோடு மாவட்டம் மட்டுமல்ல நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
எனவே ஓட்டுரிமை உள்ள நபர்கள் அனைவருக்கும் விடுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் கிழக்கு தொகுதியை சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிற பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பிப்., 27ல் ஓட்டுரிமையை செலுத்த வந்து செல்வரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.