சென்னை:கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 4000 ரூபாயாகவும்; 'டிபாசிட்'களுக்கான வட்டி 7.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நகர கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பயிர் கடன் நகை கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மேலும் பலரும் கூட்டுறவு வங்கிகளில் பணத்தை 'டிபாசிட்' செய்கின்றனர். தற்போது கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் 1 கிராம் தங்கத்திற்கு அதிகபட்சம் 3800 ரூபாய் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் அவை தங்கள் பகுதியிலுள்ள தேசிய மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் கடனுக்கு ஏற்ப கடன் தொகையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி கிராமுக்கு 3300 - 3700 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
தற்போது சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் வங்கிகளில் தங்கத்தின் மீதான கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கூட்டுறவு வங்கிகளிலும் 1 கிராமுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 4000 ரூபாயாக உயர்த்தி கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. 1 கிராம் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மேல் கடன் தர கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு வங்கிகளில் ஓராண்டு, அதற்கு மேல் வரவு வைக்கப்படும் டிபாசிட் தொகைக்கான வட்டி 7.25 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் செலுத்தும் டிபாசிட் தொகைக்கு வட்டி 8 சதவீதமாகவும்; மாற்று திறனாளிகளின் டிபாசிட்டுகளுக்கு 7.75 சதவீதமாகவும் வட்டிஅதிகரிக்கப்பட்டு உள்ளது.