மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம் இன்று நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. ஐந்தாம் நாள் விழாவாக 22ம் தேதி தீமிதி விழா நடந்தது.
இன்று 24ம் தேதி, முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் பங்கேற்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணமாகவும், வாகனங்களிலும் மேல்மலையனுாரில் குவிந்து வருகின்றனர். அதனையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.