இன்னும் 15 ஆண்டுகளில் கோவில்களில் அர்ச்சகர்களாக பணி புரிய ஆட்கள் இருக்காது'' என, எச்சரிக்கை மணி அடிக்கத் துவங்கி இருக்கிறார் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பொன் மாணிக்கவேல்.
சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல், ஓய்வுக்குப் பின், முழு நேர ஆன்மிக விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர், கோவில்களின் செயல்பாடு; அர்ச்சர்களின் நிலை குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
சமீபத்தில், அவர் பேசியதாவது:
தமிழகம் முழுதும் 36 ஆயிரம் கோவில்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பின், 10 ஆயிரம் கோவில்களில் பணியாற்ற அர்ச்சகர்கள் இல்லாத நிலை உருவாகும். அதுக்காகத்தான், அர்ச்சகர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுங்கன்னு சொல்றேன்.
இந்த நிலையை உணர்ந்துதான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தையெல்லாம் அரசு செயல்படுத்தி வருகிறது.அர்ச்சகர்களுக்கு போதுமான அளவுக்கு வருமானம் இல்லை என்பது உண்மைதான். அதனால்தான், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், தட்டில் காசு போடுங்கள் என்று சொல்லி, அதை வலியுறுத்துகிறேன்.
ஐந்து ரூபாய் போடுகிறவர்கள், பத்து ரூபாய் போடட்டும். பத்து போடுறவங்க, இருபது ரூபாய் போடட்டும். ஏன், நூறு, ஐம்பதுகூட போடட்டுமே. அதற்காக, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.
செலுத்தலாம். கொஞ்சமாக காசு போட்டால் போதும். ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ உண்டியலில் காணிக்கை செலுத்தினால் போதும். அந்தப் பணத்தை எடுத்துதான் அமைச்சர் செலவு செய்வதாகச் சொல்கின்றனர்.
அதற்காகத் தான், மொத்த காணிக்கையையும் உண்டியலில் செலுத்த வேண்டாம் என சொல்லி இருக்கிறேன். அர்ச்சகர்கள் வைத்திருக்கும் தட்டில் காணிக்கையாகச் செலுத்தினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
காணிக்கையே வாழ்வாதாரம்
ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:ஹிந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான எல்லா கோவில்களுக்கும் பக்தர்கள் ஏராளமாகச் செல்வதில்லை. ஒரு கால பூஜைக்குக் கூட வழியில்லாத பல கோவில்கள் உள்ளன. பெரிய கோவில்கள் சிலவற்றில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் செல்வதால், கோடிக்கணக்கில் வருமானம் வரலாம். மற்ற கோவில்களில் வருமானம் குறைவுதான்.
பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பத்தான் வருமானமும். ஆனால், காலம் காலமாக கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிவோர், கோவில் தட்டில் செலுத்தப்படும் காணிக்கையை நம்பித்தான் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளனர்.
பக்தர்களும் சமீபகாலமாக அர்ச்சகர் தட்டில் பெரிய அளவில் காணிக்கையாக பணம் போடுவதில்லை. கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிவோரை, மாதத்தின் 30 நாட்களும் கடவுளுக்கு சேவகம் செய்ய அனுமதிப்பதில்லை. மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அர்ச்சனைத் தட்டில் விழும் பணம் எவ்வளவு வந்து விடும்? எல்லா கோவில்களிலும் அர்ச்சகர்களுக்கு முறையான சம்பளம் கிடையாது. அதிகபட்சமாக மாதம் ஐநூறு ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்படி மோசமான வாழ்வாதாரத்தில் தான் பெரும்பாலான அர்ச்சகர்கள் உள்ளனர். அதனால்தான், தற்போது அர்ச்சகர்களாக இருப்போர், தங்கள் காலத்துக்குப் பின், தங்களுடைய வாரிசும் இந்தப் பணியை கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம் என முடிவெடுக்கின்றனர்.
அர்ச்சகர்களாக பணிபுரிய வேண்டும் என்றால், அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.எந்தவிதமான சலுகைகளும் இல்லாத அர்ச்சகர் பணியை, தட்டு வருமானத்தை நம்பித்தான் பலரும் இன்றும் செய்கின்றனர்.
இந்த யதார்த்தம் எதுவும் தெரியாதவர்கள் தான், அர்ச்சகர்கள் லட்சம் லட்சமாக சம்பாதிப்பது போல நினைத்துக் கொண்டு, தட்டில் காசு போடாதீங்க; உண்டியலில் காணிக்கை செலுத்துங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்க.இவ்வாறு, அவர் கூறினார்.
சம்பாவனையை கேள்வி கேட்கக் கூடாது
மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியதாவது:அர்ச்சகர்களுக்கு, அர்ச்சனை தட்டில் செலுத்தப்படும் காணிக்கை என்பது சம்பாவனை. அதை யாரும் லஞ்சம் என்றோ; யாசகம் என்றோ; தர்மம் என்றோ சொல்ல முடியாது. அதை கேள்வி கேட்கும் உரிமைகூட யாருக்கும் கிடையாது. சம்பாவனை என்பது, அதை கொடுப்பவருக்கும்; பெறுபவருக்கும் இடையிலான உரிமை.
அர்ச்சனை தட்டில் காணிக்கை செலுத்தாதீங்கன்னு யாரும் சொல்லக் கூடாது. அதற்கான உரிமை யாருக்கும் இல்லை. அர்ச்சகர்கள் இன்று வரை அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் எந்த உரிமையும்; சலுகையும் அவர்களுக்கு அளிக்கப்படாதபோது, அவர்களுடைய சம்பாவனை பெறும் விஷயத்தில் மட்டும் அரசு ஏன் தலையிடுகிறது?
தட்டு காணிக்கை கூட, அர்ச்சகர்கள் யாரிடம் இருந்தும் வற்புறுத்தி வாங்கவில்லை. பக்தர்கள் இஷ்டப்பட்டு அளிப்பது. அதைத் தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. எல்லா கோவில் அர்ச்சகர்களுக்கும், தட்டு காணிக்கை லட்சம் லட்சமாக கிடைப்பதில்லை.
இது, எதுவுமே புரியாமல், தட்டுக் காணிக்கை வாங்கக் கூடாது என்று சொன்னால், பாரம்பரியத்தை, நடைமுறையை மீறி அரசும்; அதிகாரிகளும் நடப்பதாகத்தான் அர்த்தம்.
அர்ச்சகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் இருந்தால், கட்டாயம் வாரிசுகளை இதே தொழிலுக்கு அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில், ஒரு கட்டத்தில் கோவில்களுக்கு பூஜை செய்ய அர்ச்சகர்கள் இல்லாத சூழல் உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
பட்டை சாதமே ஐநூறு ரூபாயாக மாறியது
ஹிந்து அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற செயல் அலுவலர் கோவிந்தராஜ் கூறியதாவது:காணிக்கையை அர்ச்சகர்களின் தட்டில் போடுவது என்பது தனி மனித உரிமை. அதில் யாரும் தலையிடக் கூடாது. கோவிலைப் பொறுத்த வரை, அர்ச்சகர்களுக்கு முன்பெல்லாம் 'உண்ட கட்டி' என்று சொல்லப்படும் பட்டை சாதம் தான் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது அது மாதம் ஐநூறு ரூபாய் என மாறி இருக்கிறது.
பெரிய கோவில்களுக்கு அப்படியில்லை. வரும் வருமானத்தின் ஒரு பகுதி கோவில் பணியாளர்களுக்கான சம்பளமாக வழங்கப்படுவதால், சில கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு கூடுதல் வருமானம் வரும்.
ஆனால், பெரும்பாலான கோவில் அர்ச்சகர்களின் நிலை ரொம்பவும் மோசம். இதே நிலையில்தான், கோவிலில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள் நிலையும் உள்ளது.
அதனால்தான், கொங்கு பகுதியில் இருக்கும் சில கோவில்களில், 'தட்டு காணிக்கை உண்டியல்' என வைத்து, அதில் தட்டில் விழும் பணத்தை எடுத்து வந்து போடுகின்றனர்.
பின், அதை எண்ணி, கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் பிரித்துக் கொள்ளும் நடைமுறை உள்ளது.வருமானமே இல்லாத கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கான சம்பளம் கொடுக்க, ஆணையர் சிறப்பு திட்ட நிதியில் இருந்து பணம் பெறப்படுகிறது. அந்தப் பணமும் சரியான நேரத்துக்கு வராது. வந்தாலும், ஐந்தாறு மாதங்கள் சேர்த்து வைத்துத்தான் கொடுப்பர். கொடுக்கும் 400 ரூபாய் பணத்துக்கு இத்தனை இழுபறி.
அரசு தரப்பில் தட்டு பணம் வாங்கக் கூடாது என அர்ச்சகர்களுக்கு சொல்லப்படுமானால், அதற்கு முன்பாக, அவர்களையெல்லாம் அரசு ஊழியர்களாக்கி, அரசே அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கான மாத சம்பளம் வழங்க வேண்டும். இதற்கென, சிறப்பு நிதியையும் ஒதுக்க வேண்டும்.
அதையெல்லாம் செய்யாமல், தட்டு பணத்துக்கும் பங்குக்கு வந்தால், அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களுடைய வாரிசுகள் யாரும் அர்ச்சகர் பணிக்கு வர மாட்டார்கள்.
ஒரு கட்டத்தில், அர்ச்சர்கள் தட்டுப்பாடு ஏற்படத்தான் செய்யும். சொல்லப் போனால், இப்போதே அர்ச்சகர் தட்டுப்பாடு இருக்கிறது. ஒரே அர்ச்சகரே, நான்கைந்து கோவில்களில் பூஜை செய்யும் நிலை உள்ளது.