''ஜாதியும், பணப்புழக்கமும் எல்லை மீறிவிட்டது. அப்போது வாக்காளர்கள், வேட்பாளர்களின் காலை தொட்டு, தண்ணீர் ஊற்றி ஆரத்தி எடுத்து ஆசிர்வதித்தனர்,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் பி.ஜி.ஆர்.சிந்தியா தெரிவித்தார்.
ராம்நகர் மாவட்டம், கனகபுராவில் 1949ல் பிறந்தவர் பி.ஜி.ஆர்.சிந்தியா, 74. பி.இ., சிவில் இன்ஜினியர் முடித்த இவர், முதன் முதலாக 1983ல் எம்.எல்.சி.,யாக தேர்வானார். பின், 1985, 1989, 1994ல் கனகபுராவில் ஜனதா கட்சி வேட்பாளராகவும்; 1999, 2004ல் ம.ஜ.த., சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போது, சாரணர் இயக்க பொறுப்பில் உள்ளார்.
அரசியல் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
நாங்கள் தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், வாக்காளர்கள், வேட்பாளர்களின் காலை தொட்டு, தண்ணீர் ஊற்றி ஆரத்தி எடுத்து ஆசிர்வதித்தனர். ஆனால், இப்போது ஜாதியும், பணப்புழக்கமும் எல்லை மீறிவிட்டது.
முன்னர் இருந்த வன்முறை, தற்போது குறைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், இரவு 10:00 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. அப்போது, அதிகாலை 2:00 - 3:00 மணி வரை பிரசார கூட்டங்கள் நடந்தன. மக்கள், எங்களுக்காக காத்திருந்தனர். அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இருந்தது. அவர்கள் சொல்வதை நம்பினர். இப்போது அப்படியல்ல.
தேர்தல் பிரசாரத்துக்கு எனது சொந்த பணத்தில் ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை தான் செலவு செய்தேன். மீதியை மக்கள் எனக்காக செலவழித்தனர்.
முதல் தேர்தலில், கிராமங்களை சரியாக அறியவில்லை. எந்த ஊர், என்ன ஜாதி என்று தெரியாது. எனக்கு கடைசி வரை யார் எந்த ஜாதி என்பது தெரியாது. கனகபுராவில் ஆறு முறை வெற்றி பெற்றாலும், ஜாதி பேதம் வந்ததில்லை. தொகுதி மறுசீரமைப்பால், வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கர்நாடகாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா அரசாகும். அப்போதைய காங்கிரஸ் முதல்வர் குண்டுராவ் மீது பல அவதுாறுகள் வந்தன. அன்று அவர்கள் செய்தது, இன்றுடன் ஒப்பிடுகையில் ஒன்றும் இல்லை. அப்போது, பிரசாரத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இப்போது, 100 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்
.- நமது நிருபர் -