சேலம்: மயில், காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு சேதம் உண்டாவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.
அதில் விவசாயிகள் பேசியதாவது: பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்வதற்கான, 'லிங்க்' வசதியை, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு தர வேண்டும். நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு, பி.எம்.கிசான் உதவித்தொகை கிடைக்கவில்லை. சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற, ஊராட்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு நாட்டு மாடுகளை வழங்க வேண்டும்.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் காட்டுப்பன்றி, மயில்கள் உள்ளிட்டவை பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்தில் குள்ளநரி இருந்தால் காட்டுப்பன்றி, மயில் ஆகியவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும். வேட்டையாடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதோடு குள்ளநரிகளை வனத்தில் கொண்டு வந்துவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
வேளாண், உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய விதைகள் குறித்த கருத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் இயற்கை முறையில் வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.