கரூர்: கரூர் - வாங்கல் சாலையில் குப்பை கிடங்கில் தடுப்புகள் சேதமடைந்து, குப்பை பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரூர் - வாங்கல் சாலையில், குப்பை கிடங்கு செயல்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பை, வேன் மற்றும் லாரிகள் மூலம் இங்கு கொண்டுவந்து கொட்டப்படுகிறது. பின் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது. வாங்கல் சாலையின் இருபுறமும் குப்பை கிடங்கு வளாகம் உள்ளது.
இதில் ஒரு புறத்தில், காற்றில் குப்பை பறக்காத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறத்தில் தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், குப்பை, காற்றில் பறந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.
சில நேரங்களில், பிளாஸ்டிக் கவர்கள் பறந்து வந்து, வாகன ஓட்டிகள் முகத்தில் மூடி கொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாங்கல் சாலையில், குப்பை கிடங்கில் சேதமடைந்துள்ள தடுப்புகளை அகற்றி விட்டு, புதிதாக தடுப்புகள் வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.