பள்ளிப்பட்டு:சொட்டு நீர் பாசன குழாய்கள், பயன்பாட்டிற்கு பின், விவசாய நிலங்களுக்கு வேலியாக மறு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
விவசாய பாசன மேலாண்மையில், சொட்டு நீர் பாசன திட்டம் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது. குறைந்த நீரில் அதிக மகசூல் வெறுவதில், இது விவசாயிகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது.
நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில், மெல்லிய பிளாஸ்டிக் குழாய்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டு, சிறு துளைகள் வாயிலாக, பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முறையில், தண்ணீர் ஆவி ஆவது வெகுவாக குறையும். வாய்க்காலில் தண்ணீர் வீணாவதும் தவிர்க்கப்படும்.
பொதுவாக, நீண்ட கால பயிர்களான பூந்தோட்டம், கம்பு தோட்டம் உள்ளிட்டவற்றில், நிலத்தடி சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.மண்ணின் வளத்தை பாதுகாக்கும் விதமாக, மாற்று பயிர் செய்ய முற்படும் போது, நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள மெல்லிய பிளாஸ்டிக் குழாய்கள் அகற்றப்படுகின்றன.
அகற்றப்படும் இந்த பிளாஸ்டிக் குழாய்கள், விவசாய வயல்களில், வேலியாக மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வாயிலாக, காட்டுப்பன்றிகளால், பயிர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.