தேனி:மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவருக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கள்ளப்பட்டி மலைச்சாமி, அவரது மனைவி பரிமளா, உறவினர்கள் செல்வராஜ், பாண்டியன், மதுரை உசிலம்பட்டி கீரிபட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் ஆகியோர் இணைந்து, 2015ல் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர்.
முதலீடு
காமாட்சிபுரம் பால்பண்ணைத் தெரு டேவிட், இதில் சீட்டு கட்டினார். உறவினர்கள், அப்பகுதியில் வசித்தவர்கள் என 63 பேரையும் இந்த ஏலச்சீட்டில் சேர்த்து விட்டார். இவர்கள் 50.46 லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர்.
ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை தராமல் மலைச்சாமி தலைமறைவானார்.
பாதிக்கப்பட்ட டேவிட் உள்ளிட்டோர், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். மலைச்சாமி மற்றும் ஒச்சப்பன் ஆகிய இருவரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து செல்வராஜ், பாண்டியன், பரிமளா ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில், அனைவரும் ஜாமினில் வந்தனர்.
அபராதம்
பாண்டியன் சில வாரங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இந்த வழக்கு, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி செய்த குற்றத்துக்காக மலைச்சாமிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
செல்வராஜ், பரிமளா, ஒச்சப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.